அந்திமகாலத்து நேசம் - Sri Ranjani
தக்ஷிலா ஸ்வர்ணமாலியின் அந்திமகாலத்து நேசம் என்ற சிறுகதைத் தொகுப்பு மனித மனங்களின் மென்னுணர்வுகளைப் பற்றி உணர்வுபூர்வமாகப் பேசுகின்றது. இதிலுள்ள கருப்பொருள்களுடன் தொடர்பான கதைகளை ஏற்கனவே வேறு சில எழுத்தாளர்களும் எழுதியிருக்கின்றனர், எனினும், சமூகத்தினால் அங்கீகரிக்கப்படாத அத்தகைய விடயங்களைக் குறித்தவரின் குற்றமாகவே அவர்கள் பொதுவில் காட்டியிருக்கின்றனர். தக்ஷிலாவோ அவை யாவும் மனித மனங்களின் இயல்புகளே என மிக இயல்பாகச் சித்தரித்திருக்கிறார். அவ்வகையில் அவர் நிகழ்த்தியிருக்கும் சமூகக் கட்டுடைப்பும், அவரின் எழுத்தின் தனித்துவமும் பல்வேறு வகையான வாசகர்களையும் அவர்பால் ஈர்த்திருக்கிறது. சிங்கள மொழியில் படைக்கப்பட்டிருந்த இந்தக் கதைகளை அழகான தமிழில், உயிர்ப்பான வார்த்தைகளுக்கூடாக மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் எம்.ரிஷான் ஷெரிப் அவர்களின் மொழியாற்றலும் இந்தத் தொகுப்பு அதிகம் பேசப்படுவதற்கான ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பத்துக் கதைகளில் முதலாவது கதையான, ‘தெருவழியே’ என்ற கதை ஒரு பாலியல் தொழிலாளர் மீது காதல்கொண்ட பெண் ஒருவரின் உண...