'அகழ்' - ஒக்டோபர் 2021

 

மக்களிடம் அதிகளவில் புத்தகங்கள் செல்வதால் மட்டும் சமூகப் புரட்சி ஏற்பட்டு விடாது: தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

உரையாடியவர்: டில்ஷானி சத்துரிக்கா தாபரே - தமிழில்: பிரியதர்ஷினி சிவராஜா

தக்சிலா ஸ்வர்ணமாலி கவிதைகள், நாவல், சிறுகதைகள், சமூக விஞ்ஞான ஆய்வுகள் போன்ற பல்வேறுபட்ட படைப்புகளினூடாக தனது அடையாளத்தினை உறுதிப்படுத்திக்கொண்டு, அரசியற் பார்வையுடன் படைப்பாக்கத்தில் ஈடுபடும் ஒருவர். ‘அக்கலட்ட ஆக்கலட்ட அகுலட்ட’, ‘கெலு லே லூ விலவுன் பஹாலும’ ஆகிய கவிதை தொகுதிகள், ‘சங்வேகபிராப்த பெம்வத்துன் ஹரித்தரெஸ் கவுளுவட்ட அவசன் புஹுமன் புதா கெமிதுலென் நிக்முன த’ சிறுகதைத் தொகுதி மற்றும் ‘பீடி’ நாவல் ஆகியன அண்மைக்காலத்தில் அவரால் வெளியிடப்பட்ட நான்கு இலக்கியப் படைப்புகளாகும். ‘பீடி’ நாவல் பற்றியும், தற்கால சமூக அரசியல் பின்னணி பற்றியும் அவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் சுருக்கமான பதிவு கீழே தரப்படுகின்றது.


பீடி நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் ஆதிரை வெளியீடாக வரவிருக்கின்றது.

சிரியர்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற போதிலும், அப்போராட்டங்களில் உத்வேகத்துடன் பங்களிப்பு செலுத்தாதவர்களும் கூட தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? இங்கிருந்து கலந்துரையாடலை ஆரம்பிப்போம்.

சம்பளப் போராட்டங்களில் உழைப்பாளர்கள் எப்படியுமே கவரப்படுகின்றார்கள். ஒடுக்குதலினால் வெறுப்புக்குள்ளான மக்கள் உண்மையான வேதனையுடன் வீதிக்கு இறங்கி, நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட இயக்கங்களாக உருவெடுத்த தருணத்திலேயே அமைப்பாளர்களும் இந்த ஆசிரியர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த உத்வேகம் மிக்க பின்னணியும், இடதுசாரி இயக்கங்கள் மேற்கொண்ட நடைமுறை சாத்தியமான தலையீடும், வெற்றிகரமான ஒருங்கமைப்புடனான ஆசிரியர்களின் ஆர்ப்பாட்ட அலையும், இன்றைய காலப்பகுதியில் ஒப்பீட்டளவில் ‘ஓய்வான பொழுதுகளுடன்’ இருக்கும் ஆசிரியர்களை பெரிதும் கவர்ந்தது. எப்பொழுதுமே தமது சம்பளப் பிரச்சினை பற்றி அதிக பெரும்பான்மையான ஆசிரியர்கள் அதிருப்தி நிலையிலேயே இருந்து வந்தனர். பயனற்ற பல படிவங்களை நிரப்புவதனாலும், ஒன்லைன் கற்பித்தலின் நடைமுறைப் பிரச்சினைகளினாலும் அவர்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அதேவேளை ஒட்டுமொத்த சமூகமும் பொதுவான மிக தீவிரமான ஒடுக்குமுறையின் பாதிப்பினை எதிர்கொண்டிருந்த தருணத்தில் இந்த ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்ட சில இயக்கங்களினால் அவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.

போராட்டக் களத்தினை நோக்கிய ஆசிரியர்களின் இவ் வருகையை நான் மிகவும் பாராட்டுகின்றேன். அழுத்தத்திற்கு அடிபணியாமல் ஓய்வின்றி போராட வேண்டும் என அதனூடாக சமூகத்திற்கு வழங்கப்படும் உத்வேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

ஆனால், மக்கள் தம்மை மண்டியிட்டு வணங்க வேண்டும் என்று கருதுகின்ற, உடல் உள ரீதியில் பிள்ளைகளை துன்புறுத்த தமக்கு உரிமை இருக்கின்றது என்று சிந்திக்கின்ற, நிலவுகின்ற சமூக முறையின் உண்மையான பிரச்சினையை விளங்கிக் கொள்ளாத, முண்டியடித்துக் கொண்டு ராஜபக்சக்களுக்கு வாக்களித்த இலங்கையின் பெரும்பான்மையான ஆசிரியர்களின் சிந்தனை தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எனக்கு உள்ளன. தனிப்பட்ட ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கைகளுக்காக அல்லாமல், கொத்தலாவல சட்டமூலத்தினை தோற்கடிப்பதற்காக மட்டும் வீதியில் இறங்குமாறு ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டால் அவர்கள் வர மாட்டார்கள்.

கல்வியை தனியார்மயப்படுத்தலோ கல்வியை இராணுவமயப்படுத்தலோ அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சம்பந்தமே இல்லாத விடயங்கள். கொத்தலாவல சட்டத்திற்கு எதிராக ஆசிரியர்களை அணிதிரட்ட முற்படுகையில், ஆசிரியர்களை அப்போராட்டத்திற்குள் உள்வாங்க வேண்டுமாயின் அவர்களுக்குரியதான சம்பள கோரிக்கைகள் சிலவற்றையும் அதற்குள் இணைக்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் புரிந்துகொண்டனர். ஆனாலும் அதன் பின்னர் ஆசிரியர்களில் அதிக பெரும்பான்மையினருக்கு கொத்தலாவல சட்டமூலம் சம்பந்தம் அற்ற ஒன்றாகிப் போய் விட்டது. அது ஒரு பெருஞ்சோகம் என்பதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த ஆசிரியர் போராட்டத்திலும், அதன் முடிவிலும், ஆசிரியர்களை அரசியல் ரீதியில் சரியான முறையில் கட்டியெழுப்பும் பணியினை ஏற்பாட்டாளர்கள் செய்கின்றனரா இல்லையா என்பதே முக்கியத்துவம் பெறுகின்றது. குறுகிய நோக்கத்துடன் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாயின் அதனை விரிவுப்படுத்துவதனையே அடுத்ததாக செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய முயற்சிக்கும் போது உழைப்பாளர்கள் வீடுகளுக்கு செல்வதனால் போராட்டத்தினை குறுகிய நோக்கத்திலேயே வைத்திருக்க வேண்டிய நிலை தொழிலாளர் சங்கங்களுக்கு ஏற்படலாம். எனினும், எதிர்காலத்தில் பரந்துபட்ட அளவிலான போராட்டத்திற்கு ஓரளவு வாய்ப்பினை உருவாக்கிக் கொள்வதற்கு இன்றைய குறுகியப் போராட்டத்திற்கும் குறைந்த பட்ச ஆற்றல் இருக்கக் கூடும்.

நீங்கள் சமூக விஞ்ஞான ஆய்வுகள் சிலவற்றை படைப்புகளாக வெளியிட்டுள்ளீர்கள். இந்த படைப்புகளுக்கு தேவையான தகவல்களை தேடிச்செல்லும் போது நீங்கள் எதிர்கொண்ட தவிர்க்க முடியாது போன அனுபவம் ஏதாவது உள்ளதா?

அவ்வாறானதொரு ஸ்திரமான அனுபவத்தினை குறிப்பிட்டுச் சொல்வது கடினம். ஏதோ ஒரு காரணத்திற்காக என்னை அதிர்ச்சியில் ஆழ்;;த்திய, அவர்கள் பற்றி அதுவரையில் எவராலும் படைப்புகள் செய்யப்படாத ஒடுக்குதலுக்குள்ளான விசேட மக்கள் பிரிவினர் தொடர்பில் ஆய்வு செய்வதற்காகவே ஒரு துறையை தெரிவு செய்கிறேன். அந்த ஆய்வு நடவடிக்கைகள் முழுவதிலும் நான் உணர்வுபூர்வமான அனுபவங்கள் பலவற்றை எதிர்கொண்டிருந்தேன்.

பிரசித்தியை தேடிச் செல்கின்ற போட்டித்தன்மையிலிருந்து விடுபடுதல் என்பது நவீன கலை வரன்முறைகளில் காணப்படுகின்ற பிரதான சவால் என்று ஒரு சில படைப்பாளிகள் குறிப்பிடுகின்றனர். இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

இல்லை. எமக்குள் ‘சவால்’ என்ற சிந்தனை இயங்கினால் மட்டுமே அது சவாலாக மாறும். அவ்வாறான படைப்பாளிகளுக்கு பிரசித்தி என்பது பொருந்தாது என்பதுடன், சந்தை மற்றும் வெளியீட்டாளர்களை தேடிச் செல்வதும் கூட தேவையற்றது என்ற நிலையில் சவாலும் நிலவ வாய்ப்பில்லை. பிரசித்திக்காகவும், சந்தைக்காகவும் படைப்பாளி ஈடுபட்டுள்ள செயற்திட்டங்களை விட பிரசித்தி மற்றும் சந்தையை விரட்டிச் சொல்லாமல் இருப்பது உண்மையில் இலகுவானது. வியாபாரியாகும் அவசியம் இல்லாத நிலையில் அந்த இரண்டு விடயங்களுமே படைப்பாளிக்கு தேவையற்றது. ஒரு படைப்பினை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு அவ்வாறான விடயங்கள் அவசியம் தானே என்று அப்பொழுது யாராவது ஒருவர் சொல்லக் கூடும். படைப்பு ஒன்றை மக்களின் கரங்களில் கொண்டு சேர்ப்பதற்கு இருக்கும் வழிமுறைகள் சந்தையோ பிரசித்தியோ அல்ல. அத்துடன் அவ்வாறு மிக அதிகளவில் நூல்களை மக்களிடம் வலிந்து அனுப்புவதால் சமூகப் புரட்சி ஏற்படப் போவதும் இல்லை. அவ்வாறான விடயங்களின் மீது செலுத்தப்படும் அக்கறையையும் முயற்சியையும் சமூகத்தின் உண்மையான தேவை ஒன்றுக்காக செலுத்துவதே நேர்மை வாய்ந்த மக்கள் சார்பு படைப்பாளியின் திருப்தியாக இருக்க வேண்டும்.

‘பீடி’ நாவல், நாம் வாழுகின்ற இன்றைய சூழல் மற்றும் அதற்கு வழிவகுத்த பின்னணயின் மீது நிலைக்கொண்டிருக்கின்றது. இந்த உண்மையான பிரச்சினை குறித்து வாசகர் புரிந்துணர்வுடன் இருக்கின்றார் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

இல்லை. நான் அப்படியானதொரு புரிந்துணர்வு இருக்கும் என்று கருதவில்லை. அதேபோன்று நிலவுகின்ற இந்த நிலைமையின் கீழ் அவ்வாறான விடயங்கள் பற்றிய புரிந்துணர்வு உள்ள வாசகரை எதிர்பார்ப்பதற்கும் எமக்கு உரிமை இல்லை.

மரத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள், கடந்தகால வீரர்கள் அவர்கள் என்று கூறும் சிலரை மயானங்களிலிருந்து எழுப்பி போராட்டத்திற்கு அழைத்துச் செல்லும் தருணத்துடன் ‘பீடி’ முடிவுறுகின்றது. உயிருடன் இருக்கும் நாம் சமூக அநீதிக்காக ஏன் இறந்தவர்களை எழுப்ப நேர்கின்றது?

இதன் முடிவை பலதரப்பட்டவர்கள் பலவிதத்தில் பார்க்கின்றார்கள். அதனைத் தவிர்க்க முடியாது. அதேநேரம் அதனை தடுக்கவும் தேவையில்லை. ஒருவர் ஒரு படைப்பை மேற்கொள்ளும் போது அந்த படைப்பு தொடர்பில் எந்தவொரு நபரும் அளிக்கும் எந்தவொரு அர்த்தத்தினையும் படைப்பாளி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். தாம் எதிர்பார்க்கும் சமூக அழுத்தநிலையை படைப்பின் ஊடாக மேற்கொள்ள முடியாதிருப்பதும் அந்த காரணத்தினால் தான். அவ்வாறு உறுதியான அழுத்தத்தினை செய்ய வேண்டிய தேவை இருப்பின் அதற்கு தனியான சமூக இயக்கங்கள் இருக்க வேண்டியதும் இதனால் தான் அவசியமாகின்றது.

‘பீடி’ கதையில் வருகின்ற திண்ம ரீதியிலான கந்துரு மரம் என்ற ஒன்று இல்லை. அது எனக்கு ஒரு குறியீடு மட்டுமே. அது எமது வாழ்க்கை. சுற்றி நிற்கின்ற அனைவராலும் மரம் தொடர்பிலான முக்கியமான முடிவுகளை மேற்கொள்ள முடியாது. ‘வலதில்’ மயானம் மற்றும் இடதில்’ வயல் வெளி உள்ள இடத்தில் மரம் உள்ளது. அங்கு மரம் தொடர்பில் மிக முக்கியமான முடிவுகளை ஆரிங் முதலாளியின் மகனுக்கும் சிதுஹத்துக்கும் தான் எடுக்க முடியும். இந்த சிஸ்டத்தினுள் எமது வாழ்க்கையில் முதலீடு, விஞ்ஞானம் மற்றும் சொத்துக்கள் என்பனவே முக்கியத்துவம் பெறுகின்றது என்பதனையே அங்கு நான் கூற முற்பட்டேன்.

கவிதைகள் தம்மை பிரதிபலிக்கின்றன என்று கருதுகின்ற ஒரு சில படைப்பாளிகள், ‘ஒழுக்கரீதியில் நான் நல்லவர்’ என்று காட்டுவதற்காகவே கவிதைகளை எழுதுவதாக விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர். படைப்புகளில் கறுப்பு, வெள்ளை என்ற அடிப்படையில் பாத்திரங்கள் பிரதிபலிக்கப்படத் தான் வேண்டுமா?

கறுப்பு அல்லது வெள்ளை பாத்திரங்கள் உலகில் இல்லாத நிலையில், படைப்புகளில் மட்டும் கறுப்பு அல்லது வெள்ளை பாத்திரங்களை வெளிப்படுத்துவதனூடாக வாசகர்களை நாம் யதார்த்த நிலையிலிருந்து விலத்தி வைக்கின்றோம். ஆனால் பெரும்பாலான மக்கள் யதார்த்த நிலையிலிருந்து விலகியிருக்கவே விரும்புவதனால், மனிதர்களாகிய வாசகர்களும் படைப்பாளிகளும் உண்மைகளிலிருந்து விலகி நிற்கும் சந்தர்ப்பங்கள் சுலபமாக நிகழ்ந்து விடுகின்றன. பொய்யை உண்மை என்று நினைப்பது மிக இலகு. ஆனால் அது தவறு.

மாக்ஸ்- ஏங்கல்ஸ் கூறிய வர்க்க சமூக முறை இன்று எவ்வாறான நிலையில் உள்ளது?

அதிக பெரும்பான்மையினரின் ஆசீர்வாதத்துடன் வர்க்க அடிப்படையிலான சமூக முறை சாகாமல் உயிர்ப் பிழைத்துக் கொண்டிருக்கின்றது. வர்க்க உருவங்கள் ஆட்டம் காண்கின்ற போதிலும் நாம் மிகவும் வெற்றிகரமாக வர்க்கங்களை பேணிக் கொண்டு தான் இருக்கின்றோம். முதலாளித்துவத்திடம் மயங்கி நிற்கின்ற ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்பட்டவாகளும்; ஆகிய இரு தரப்பினரும் தத்தமது உயிரைக் கொடுத்துக் கொண்டு முதலாளித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.

கொரோனாவுடன் பயணிக்கும் இந்த உலகின் எதிர்காலம் பற்றி எம்மால் ஆகக்குறைந்த எதிர்பார்ப்புகளையாவது வைத்துக் கொள்ள முடியுமா?

கொரோனா என்பது இந்த முதலாளித்துவ சமூக முறையின் ஒரு துளி மட்டுமே உண்மையில் ‘கொரோனாவுடன்’ அல்ல, ‘முதலாளித்துவத்துடன் செல்லும் இந்த உலகின் எதிர்காலம் பற்றி;’ எம்மால் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது.

உங்களது படைப்புகள் தமிழ் மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. நூல்கள் மொழிப்பெயர்க்கப்படுவது மகிழ்ச்சிக்குரியதாயினும், ஒரே நாட்டில் பிறந்த எமது சகோதர இனத்தின் எண்ணங்கள், அவர்களின் மொழி என்பனவற்றை விளங்கிக் கொள்ள முடியாத பிரச்சினையினால் இரு தரப்பினரும் இன்னும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து மீண்டு வர நீங்கள் முன்வைக்கும் யோசனை என்ன?

மொழிப்பெயர்ப்பு இலக்கியத்தினாலோ, மொழியைக் கற்றுக் கொள்வதினாலோ தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட கடுமையான அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப் போவதில்லை. பூமியில் வாழும் எந்தவொரு இனத்திற்கும் உரித்தாகியுள்ள ஒடுக்குமுறையை விளங்கிக் கொள்வதற்கும், அவர்களின் உரிமைகளுக்காக முன்னிற்பதற்கும் அந்த மக்களின் மொழியை விளங்கிக் கொள்வது முக்கியத்துவம் பெறுவதில்லை. மாறாக மிகச் சரியான அரசியல் பார்வை எமக்கு இருப்பதே அவசியமாகின்றது. நாம் அதனையே கட்டியெழுப்புதல் வேண்டும். முள்ளிவாய்க்கால் அழிப்பினை கொண்டாடிக் கொண்டு இன்றும் பாற்சோறு உண்ணுகின்ற, அந்த மிலேச்சத்தனத்தினைப் பாராட்டுவதற்கு மூன்றில் இரண்டை வழங்கிய சிங்கள மக்களுக்கு அந்த அரசியலைக் கற்றுக்கொடுப்பதே அவசியம்.

உங்களது எதிர்கால படைப்புகள் பற்றியும் தற்போது மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டு இந்த கலந்துரையாடலை நிறைவு செய்யலாம்.

மக்களின் பார்வைக் கோணத்தில் சொற்ப அளவிலான அழுத்தத்தினை ஏற்படுத்தும் நோக்குடன் ஆரம்ப காலத்தில் நான் எழுதினேன். ஆனால் இறுதியில் எனது அழுத்தத்தினை வெளிப்படுத்துகின்ற குறிக்கோளுடன் எழுத வேண்டியதாயிற்று. மகிந்தவை விட கோட்டாபய நல்லவர் என்று சிந்திக்கின்ற, கோட்டாபயவை விட பெசில் நல்லவர் என்று நினைக்கின்ற, நாமலை விட கேசர நல்லவர் என்று நினைக்கின்ற சிங்கள சமூகத்தினை நோக்கி நாம் எழுதுகின்றோம். சிஸ்டத்தை மாற்றுவதற்கும், சீர்திருத்தங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள முடியாத பெரும்பான்மை இடதுசாரிகள் உள்ள சிங்கள சமூகத்திற்கும் நாம் எழுதுகின்றோம்.

உண்மையை சொல்லப் போனால் தற்போது நான் நின்று அவதானித்துக் கொண்டிருப்பதையே செய்கின்றேன். எதை எழுதலாம், எதற்காக எழுத வேண்டும் என்ன செய்யலாம் என்று தற்போதைய நாட்களில் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன்.

Comments

Popular posts from this blog

අගුල්මඩුවේ ලාක්ෂා ශිල්පය

බීඩි ඔතන ළදුන්

මන්දිර සරසන සේසත් කලාව