'அகழ்' - ஏப்ரல் 2021

 உரையாடியவர் அனோஜன் பாலகிருஷ்ணன் - மொழிபெயர்ப்பு பிரியதர்ஷினி சிவராஜா

இலங்கையைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி, களனி பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சிங்கள இலக்கிய உலகில் சிறுகதை, கவிதை, நாவல் படைப்புகள் வழியாக நன்கு அறியப்பட்டவர். இவருடைய பத்துச் சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. அவருடனான மின்னஞ்சல் உரையாடல் இது.

நீங்கள் பிறந்து வளர்ந்த சூழல் எத்தகைய இலக்கிய பின்புலம் கொண்டது?

1961ம் ஆண்டு பல்கலைக்கழப் பட்டத்தினைப் பெற்ற, சிங்கள பாடத்தினைக் கற்பித்த அனுபவம் வாய்ந்த ஓர் பாடசாலை ஆசிரியராக எனது தந்தையார் விளங்கினார். அவரிடம் பெருமளவு புத்தகத் தொகுதிகள் இருந்தன. சிறு வயதில் நான் அவற்றை வாசித்து விளங்கிக் கொள்ள முயற்சித்தேன்.  எனது தந்தையார் சம்பிரதாயபூர்வமான இலக்கிய மரபுகளை நிராகரித்த, நவீன இலக்கியத்தினை மதித்த ஒருவர். பாடசாலையில் 13வது தரம் வரை 5 ஆண்டுகளாக  சிங்கள இலக்கியப் பாடத்தினை எனக்கு கற்றுத் தந்த ஆசிரியராக அவர்  விளங்கினார். எனது வாழ்வின் ஆரம்ப கட்டங்களில், எனது இலக்கிய சூழலானது, பிரதானமாக எனது தந்தையாரை அடிப்படையாகக் கொண்டே கட்டியெழுப்பப்பட்டது என்றே  கருதுகின்றேன்.

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் யுத்தம் தவிர்க்க இயலாத இடத்தில் உள்ளது. சிறுகதைகளில், நாவல்களில், கவிதைகளில் மீண்டும் மீண்டும் பேசுபொருளாக யுத்தம் இருக்கிறது. சிங்கள மொழி இலக்கியத்தில் யுத்தம் எந்த அளவுக்கு பேசப்படுகிறது?

போரைக் கருப்பொருளாகக் கொண்ட படைப்புகள் சிங்கள இலக்கியங்களில் பெரும்பாலும் கவிதைகளிலும், பாடல்களிலும் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் அவை தொடர்பில் எனக்கு திருப்தி இல்லை. தமிழ் மக்கள் அனுபவித்த அடக்குமுறைகள் சிங்கள இலக்கியங்களில் பேசப்படுவது போதுமானதாக இல்லை. யாராவது ஒரு சிங்களவர் ‘சிங்கள இலக்கியத்தில் போரைக் கருப்பொருளாகக் கொண்ட படைப்புகள் பெருமளவில் உள்ளன’ என்று கூறுவாராயின், அதற்கு நான் ‘இல்லை. அது தவறு’ என்றே கூறுவேன். சிங்கள இனவாத கோணத்தில்  போர் சிந்தனையுடன் எழுதப்பட்ட படைப்புகளை நான் மிகவும் அருவருப்புடன் வெறுத்து ஒதுக்குகின்றேன். மனிதநேயப் பார்வையில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் சில படைப்புகளிலும் மறைமுகமாக இனவாதம் உள்ளடங்கியிருக்கும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை நியாயமான கோணத்தில் பார்த்து சிங்கள மொழியில் படைப்புகளை மேற்கொண்டுள்ள ஒரு சில படைப்பாளிகளை நான் பெரிதும் மதிக்கின்றேன்.

உங்கள் கதைகளில் யுத்தத்தின் பாதிப்பை எப்படி உணர்கிறீர்கள்? 

போரை அடிப்படையாகக் கொண்ட எனது  படைப்புகள் எண்ணிக்கையில் மிக சிலவாகும்.  எனக்கு இவ்விடயத்தில் திருப்தியில்லை. இதனால் என் மீது எனக்கே சுயவிமர்சனங்கள் உள்ளன.

‘பொட்டு’ சிறுகதையில் தமிழ், சிங்கள உறவுப் பிளவுக்கு அப்பால் உள்ள சிநேகிதத்தையும், காதலையும் கவித்துவமாகச் சொல்ல முடிந்திருக்கிறது. இது மானுடம் நோக்கிய பார்வை. எழுத்தாளர்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் இந்த அகன்ற பார்வையை எப்படி வந்தடைன்தீர்கள்?

நான் வாழ்கின்ற சிங்கள சமூகத்தில் பெரும்பான்மையானோர் இனவாதிகள். அவர்கள் மத்தியில்தான் சரியான சமூகத் தெளிவினைக் கொண்ட மிகவும் சிறுபான்மையானவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த சிறுபான்மையினர் தான் தொடர்ச்சியாக எனக்கு இவ்வாறானதொரு மனோநிலையைத் தருகின்றார்கள் என்று  நினைக்கின்றேன்.

தனிமனித உறவுச்சிக்கல்கள் உங்கள் கதைகளில் திரும்பத் திரும்ப பேசப்படுவது ஏன்?

அவை மனிதர்களுக்கிடையிலான உறவுகள் தொடர்பான பிரச்சினைகள் மட்டுமல்ல. அவற்றினூடாக நான் சமூகம் பற்றிய விரிவான விபரிப்பினை  முன்வைக்க முயற்சித்திருக்கின்றேன்.

சிறுவயதிலும் சரி, நவீன இலக்கியத்திற்குள் தீவீரமாக நுழையும் போதும் சரி உங்களுக்கு முன்னுதாரணமாக யாராவது இருந்திருக்கிறார்களா?

நானும் எனது அண்ணாவும் பாடசாலை செல்லும் காலத்தில், அண்ணா அவரின் மனத்திருப்திக்காக யாருக்கும் தெரியாமல் எழுதி மறைத்து வைத்த கவிதைகள் மற்றும் சிறுகதைகள் சில அவரது புத்தகங்களினுள் இருந்து கிடைத்தன. அவற்றை நான் வாசித்திருக்கின்றேன். அதன் பின்பு தான் கவிதைகள், சிறுகதைகள் எழுதும் ஆர்வம் எனக்கும் ஏற்பட்டது. இந்த விடயம்  அண்ணாவுக்கு இன்று வரை தெரியாது.

சிறார்களின் பார்வையில் கதையைச் சொல்லும்போது, பிறழ்வு உலகத்தின் மீதுள்ள இருள்மையை தாண்டி, அதன் மீதுள்ள ஒளியைக் காட்டமுடியும். நதியாவட்டைப் பூக்கள், ஒரே திடல் போன்ற உங்களது கதைகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள். இவற்றுக்கான அகத் தூண்டுதல்கள் எவ்வாறு கிடைத்தன?

சமூகத்தினால் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்ற கோட்பாடுகளுக்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கும் ஒரு தரப்பினராகத்தான் சிறுவர்களை நான் காண்கின்றேன். அவர்கள் முழுமையாக ஒரு வரையறைக்குட்பட்டவர்கள் அல்லர். அவ்வாறானதொரு கோணத்தில் ஏதாவது ஒரு விடயத்தினை எழுதும் போது அங்கீகரிக்கப்பட்ட வரையறையிலிருந்து அதற்கு அப்பால் நகர்ந்து செல்வது இலகுவாக இருக்கும். அப்பொழுதுதான் ஆழமான விடயத்தினையும் மிகவும் சரளமாக எழுத முடியும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் கூடிக் குறைந்த அளவில் சிறுபிள்ளைத்தனம்  உள்ளது. அதாவது சிறுவர்கள் உள்ளனர். 

புறவய சித்தரிப்புகள் இல்லாமல், அல்லது மிகக் குறைந்த புறவய சித்தரிப்புகளோடு உரையாடல்கள் மூலம் கதைகளை நிகழ்த்திச் செல்கிறீர்கள். “மாங்காய் பருவத்தில் அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது”, “அந்திம காலத்தின் இறுதி நேசம்” போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். புறவய சித்தரிப்புகள் எந்தளவுக்கு தேவை என்று நினைக்கிறீர்கள்?

தனது படைப்பினூடாக ஒரு படைப்பாளி வெளிப்படுத்த முயற்சிக்கும் விடயத்தின் அடிப்படையிலேயே அது தீர்மானிக்கப்படுகின்றது. தனிமனித இயல்புகள், மனிதர்களுக்கிடையிலான உறவுச் சிக்கல்கள் மற்றும் பலதரப்பட்ட சமூகக் கோட்பாடுகள் என்பனவற்றை ஆராயும் போது,  உரையாடல்களின் மூலம் அவற்றை மேலெழச்  செய்ய  முயற்சித்திருக்கின்றேன்.

சிங்கள இலக்கியத்தில், விமர்சன மரபு எவ்வாறு உள்ளது? அழகியல் மரபு, மார்க்சிய மரபு என்பதற்கு இடையில் விவாதங்கள் நிகழ்வது உண்டா?

ஆம். ஆனாலும் மிகச் சிறிய அளவில். அவை மிகவும் தீவிரமான தளத்தில் காணப்படுகின்ற ஆழமான பரந்துபட்டளவிலான வாதவிவாதங்கள் அல்ல என்று தான் எனக்கு தோன்றுகின்றது. அவை பெரும்பாலும் நட்புரீதியிலான அடிப்படையைக் கொண்டது. அதேபோன்று தனிநபர் செல்வாக்கினைக் கட்டியெழுப்புகின்ற போட்டித்தன்மையும், வர்த்தகப் போட்டிகளும் அவற்றில் உள்ளடங்குகின்றன.  

உங்களது கதைகளுக்கு என்னவகையான எதிர்விமர்சனங்கள் வந்திருக்கின்றன?

நான் சிறுவர்களின் கோணத்தில் எழுதிய சிறுகதைகளில் வரும் சிறுவர்கள் அவ்வாறு ஒருபோதும் யதார்த்தத்தில் இருக்க மாட்டார்கள் என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது. பாலியல் பற்றி பேசும் இடங்களில் மௌனமாக ஸ்தம்பித்து நின்று விடுவதனைத் தவிர அந்த தலைப்பு பற்றி பேசவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். எனது படைப்புகள் பற்றி வெளியாகும் பாராட்டுகள் பற்றியோ விமர்சனங்கள் பற்றியோ எனக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லை. விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் சுதந்திரமாக எழுதுவதனையே  நான் பெரிதும் விரும்புகின்றேன்.

நீங்கள் தனிப்பட இலக்கிய கோட்பாடாக எதையாவது கொண்டு உள்ளீர்களா?

வாசகர்களை மகிழ்விப்பதற்காகவோ, பணம் சம்பாதிப்பதனை இலக்காகக் கொண்டோ, நிலவுகின்ற சமூக முறையை நியாயப்படுத்துவதற்காகவோ, படைப்பாளியின் சமூக அந்தஸ்தை மேலோங்க செய்வதற்காகவோ, விருதுகளுக்காகவோ இலக்கியப் படைப்புகள் வெளிவருவதனை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். சிற்சில சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் மனிதர்கள் உணருகின்ற அழுத்தங்களை மிகவும் நேர்மையான முறையில் வெளிப்படுத்துவதற்காக எழுதும் எழுத்துக்கள், மற்றும் மனிதர்களை தவறான வரையறைகளிலிருந்து அப்பால் அழைத்துச் செல்லவும், நிலவுகின்ற சமூக முறையை நோக்கி கேள்வியெழுப்பவும் உதவுகின்ற எழுத்துக்கள் என்பனவற்றை மனதாரப் பாராட்டுகின்றேன். அது தான் எனது நிலைப்பாடுமாகும்.

உங்களுக்கு இலக்கியக் கோட்பாடுகள் மீது நம்பிக்கை உள்ளதா?

பிரதான தளத்தில் உள்ள பலதரப்பட்ட இலக்கியக் கோட்பாடுகள் குறித்து உண்மையில் நான் எந்தவிதமான அக்கறையையும்  காட்டுவதில்லை. நான் அவற்றை பொருட்படுத்துவதும் இல்லை.

தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் இலக்கியங்களை, சிங்களத்தில் வாசிக்க ஏதுவான சூழல் இருக்கிறதா? அப்படி நீங்கள் வாசித்து சிலாகித்த தமிழ் படைப்பு ஏதும் உள்ளதா?

ஜெயபாலன் மற்றும் தமிழினி ஆகியோரின் படைப்புகளை  சிங்களத்தில் வாசித்திருக்கின்றேன். தமிழ் படைப்பாளிகளின் இலக்கியப் படைப்புகள் சிறிய எண்ணிக்கையில் தான் சிங்களத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. அம்மொழிப்பெயர்ப்புகளை நாங்கள் பாராட்டுதல் வேண்டும். எனினும் தமிழ் இலக்கிய நூல்கள் சிங்கள மொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள எண்ணிக்கைக்  குறித்து எம்மால் திருப்தி கொள்ள முடியாது. தமிழ் படைப்பாளிகள் மிகவும் நேர்மையுடன் எழுதும் விடயங்களை சிங்களத்தில் மொழிப்பெயர்ப்பு செய்தால், அவற்றை சரியான கோணத்தில் பார்க்கக் கூடிய பரந்துபட்ட மனநிலை பெரும்பாலான சிங்கள வாசகர்களுக்கு கிடையாது. இது தான் உண்மை நிலை. வரலாறு முழுவதும் இலங்கை தமிழர்கள் அனுபவித்த அடக்குமுறைகள், இலங்கை தமிழ் மக்களின் உயர்ந்த தியாகங்கள் என்பனவற்றை எதிர்கால சந்ததியினருக்காக தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அரச அடக்குமுறையைப் பொருட்படுத்தாமல் அந்த படைப்புகள் என்றாவது ஒருநாள் சிங்கள மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட வேண்டியதும் அவசியமாகும்

Comments

Popular posts from this blog

අගුල්මඩුවේ ලාක්ෂා ශිල්පය

බීඩි ඔතන ළදුන්

මන්දිර සරසන සේසත් කලාව