அந்திமகாலத்து நேசம் - Sri Ranjani

 


தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் அந்திமகாலத்து நேசம் என்ற சிறுகதைத் தொகுப்பு மனித மனங்களின் மென்னுணர்வுகளைப் பற்றி உணர்வுபூர்வமாகப் பேசுகின்றது. இதிலுள்ள கருப்பொருள்களுடன் தொடர்பான கதைகளை ஏற்கனவே வேறு சில எழுத்தாளர்களும் எழுதியிருக்கின்றனர், எனினும், சமூகத்தினால் அங்கீகரிக்கப்படாத அத்தகைய விடயங்களைக் குறித்தவரின் குற்றமாகவே அவர்கள் பொதுவில் காட்டியிருக்கின்றனர். தக்‌ஷிலாவோ அவை யாவும் மனித மனங்களின் இயல்புகளே என மிக இயல்பாகச் சித்தரித்திருக்கிறார். அவ்வகையில் அவர் நிகழ்த்தியிருக்கும் சமூகக் கட்டுடைப்பும், அவரின் எழுத்தின் தனித்துவமும் பல்வேறு வகையான வாசகர்களையும் அவர்பால் ஈர்த்திருக்கிறது. சிங்கள மொழியில் படைக்கப்பட்டிருந்த இந்தக் கதைகளை அழகான தமிழில், உயிர்ப்பான வார்த்தைகளுக்கூடாக மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் எம்.ரிஷான் ஷெரிப் அவர்களின் மொழியாற்றலும் இந்தத் தொகுப்பு அதிகம் பேசப்படுவதற்கான ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பத்துக் கதைகளில் முதலாவது கதையான, ‘தெருவழியே’ என்ற கதை ஒரு பாலியல் தொழிலாளர் மீது காதல்கொண்ட பெண் ஒருவரின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் மிக அற்புதமாக விபரிக்கிறது. அவனுடனே வாழ்க்கையைக் கட்டியமைக்க வேண்டுமென்ற வேட்கையுடன் அவனைத் தேடித் தெருவழியே அலையும் அவள் முடிவில் ஓர் இளம் பெண்ணுடன் அவனைக் காண்கிறாள். அவளின் கனவு சிதறுகிறது, இருந்தாலும்கூட, அவனைத் தன் காருக்குள் ஏற்றிச்சென்று அவனின் இடத்தில் இறக்கிவிடுகிறாள்.  ‘நாங்கள் வழமையாகப் போகும் இடத்துக்குப் போவோம்’ எனக் கூறுபவனுக்கு, ’இல்லை நான் நிரந்தரமாக ஊருக்குப் போகப்போகிறேன்’ எனப் பதிலளிக்கிறாள். பலரைத் திருப்திப்படுத்தும் பாலியல் தொழில்தான் அவனின் தொழில் எனத் தெரிந்திருந்தும்கூட இன்னொரு பெண்ணுடன் சேர்த்து அவனைக் கண்டபின் அவனுடன் கூடுவதற்கு அவளால் முடியவில்லை. எனினும், ‘சிலவேளை இனிமே நாங்கள் சந்திக்கமாட்டம்,’ எனக் கூறி அவள் விடைபெறுவது அவளில் அவளுக்கே நம்பிக்கையில்லை எனக் காட்டுவதாகவும் கருதமுடியும்.  அதனால் முடிவில் வருத்தமுற்ற அவனின் தாய்க்கு மருந்தெடுத்துக் கொடுக்கும்படி பணம் வழங்கும் அவளின் செயல் அவளின் இரக்கமான மனதைக் காட்டுகின்றதா அல்லது மரத்துப் போகமுடியாத அவளின் காதலைக் கூறுகின்றதா எனக் கூறமுடியவில்லை.

இருப்பினும், “முன்பொரு நாள் அளவிட முடியாத உற்சாகத்தோடு தெருவில் திரிந்த நான், இந்தளவு மந்தமாகிப் போகத் தொடங்கியது எவ்வாறு, அது எப்போது என்றெல்லாம் யோசித்து மனம் சோர்ந்து போகவேண்டிய தேவை எனக்கு இல்லை. மனிதர்கள் எவரும் தமது ஜீவிதத்தில் எடுத்த எந்தத் தீர்மானத்திற்காகவும் மனம் வருந்தத் தேவையில்லை. மனிதனால் எடுக்கப்படும் எந்தத் தீர்மானமும் தவறானதல்ல.” என, அவள் சிந்திப்பதுபோலக் கூறப்படுவது, குறித்ததொரு சூழ்நிலையில் எங்களுக்குச் சரியெனத் தோன்றியதை நாங்கள் செய்ததுபற்றி நாங்கள் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என ஓர் ஆறுதலையும் எங்களுக்கு வழங்கத் தவறவில்லை. தான் எடுத்த தீர்மானங்களுக்காக வருந்துபவளாக அந்தப் பாத்திரம் படைக்கப்பட்டிராமையும். அந்த அந்தச் சூழ்நிலையில் எது சரியெனப் பட்டதோ அதைச் செய்திருக்கிறேன், அதற்காகப் பழிசொல்ல எவராலும் இயலாது ஏனெனில், இது எனது ஜீவிதம் என தன்னைப் பற்றிய கழிவிரக்கமின்றிப் பேசுவதாகக் காட்டுவதும் சிறப்பாக இருந்தன. 

‘மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது’ என்ற கதையில் வரும் அருண் என்ற பாத்திரத்தின் ஊடாக, “மஞ்சுவுக்கு உன் மேல பாசம் இருக்குன்னா உனக்கு வழுக்கை விழுந்தாக் கூட அதை நேசிக்குற அளவுக்கு பாசம் இருக்கணும். நாங்க நேசிக்குற ஆட்களுக்கு இயல்பா என்ன அமைஞ்சிருக்கோ அதைத்தான் நேசிக்கணும்,” என நிலுகாவின் கணவன் விமர்சிக்கப்படுவது உண்மையான அன்பு எதென்பதைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. ஆனால் எங்களில் எத்தனை பேரால் இப்படி இருக்கமுடியும் என்பது கேள்விக்குறிதான். அருணின் இந்த இயல்புக்காக அவனை அவளுக்குப் பிடித்திருக்கலாம். “நான் தூங்க வரல. உன்னோட சேர்ந்து விழிச்சிட்டிருக்குறதுதான் எனக்கு வேணும்,’” எனக் கூறுவதும், “மஞ்சுவோ, அஷேனோ என்னோட கதைச்சிட்டிருக்க வர்றதில்லையே.” என அவள் தன் கணவனைப் பற்றியும் மகனைப் பற்றியும் பிரஸ்தாபிப்பதும் அருணுடனான உறவும் அவனுடனான தொடர்பாடலும் அவளுக்குக் கொடுக்கும் மகிழ்ச்சியையும் அதன் தேவைப்பாட்டையும் கோடிட்டுக்காட்டுகின்றன. வழமையான சமூக வரையறைகளின் கீழ் சில உறவுகளுக்கு பெயரிட முடியாது என்பதையும் இது உணர்த்திநிற்கிறது. இருப்பினும் எதிலும் பற்றற்ற தோரணையில் அவளுக்கு ஆலோசனை வழங்குவதுபோல அருண் கதைப்பதாகக் காட்டுவதன்மூலம் ஆண்களை மேலாக வைத்திருக்கும் எங்களின் கலாசாரத்தை எழுத்தாளர் காட்டுகின்றாரோ எனவும் எண்ணத்தோன்றியது.

காதல் என்பது அழகில் மட்டுமன்றி தகுதிநிலையிலும் தங்கியிருக்கிறது என்ற யதார்த்தத்தைக் கூறுகிறது, ‘அன்றைக்கு பிறகு அவன் அவளருகே வரவேயில்லை,’ என்ற கதை. மிக ஆவலுடனும் காதலுடனும் சந்திக்கச் சென்றவனின் மனதை அந்தப் பெண்ணின் ஏழ்மை நிலை மாற்றிவிடுகின்றது. அத்துடன், இறங்கியவனின் தலைமுடி கலைந்து போயிருந்தது, சப்பாத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து போயிருந்தன, களிசானுக்குள் ஒதுக்கிவைத்திருந்த மேல்சட்டை வெளியே வந்திருந்தது போன்ற விபரணங்கள் இலங்கையில் பேருந்துப் பயணம் ஒன்று எப்படியிருக்கும் என்ற காட்சியைக் கண்ணுக்கு முன் கொண்டுவந்தன.

 ‘அந்திமகாலத்து நேசம்’ என்ற கதையில் முதியவர் ஒருவரின் அன்புக்கான ஏக்கம் அழகாகக் காட்டப்பட்டிருந்தாலும், அந்த இளம் பெண் தன் கணவருடன் வாழ்வதை அண்ணனுடன் வாழ்வதாக அவருக்குச் சொல்வது, கொஞ்சம் அதீதமானதாகத் தெரிந்தது எனக்கு. கணவனின் சந்தேகப் புத்தி தெரிந்து அங்கு போவதை மறைக்க நினைப்பது அதற்கான காரணம் எனக் கதையில் காரணம் கற்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளுக்குள் கள்ளம் இல்லாவிடில் அவருக்கேன் அவள் பொய் சொல்லவேண்டுமென எனக்குள் கேள்வி எழுந்தது. அவளைப் பற்றியே அனுதினமும் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த முதியவர் ஒரு கட்டத்தில் தங்களுக்கு மகள் இல்லாத குறையை அவள் மூலம் நிவர்த்திப்பதாக நினைக்கிறார்.  அவளும் அவருடன் ஏதோவொரு ஆத்மார்த்தமான உறவை உணர்ந்திருந்தாள் என்பது அவர் இறந்தபின்புகூட அந்த வீட்டு வழியே அவள் செல்வதாகக் காட்டப்பட்டிருந்தது.

ஏழைக்குடும்பத்தினரின் அவல வாழ்வையும் அரச மருத்துவமனை ஊழியர்களின் அசட்டைத் தன்மையையும் ‘எப்போதும் மேரி நினைவில் வருகிறாள்’ என்ற கதை கண் முன்நிறுத்தியது. நீரழிவு நோய்க்கான கட்டுப்பாடு அரச மருத்துவமனை மூலம் இலங்கையில் பேணப்பட முடியாதா என்பது எனக்குத் தெரியவில்லை. மகளையும் கணவரையும் உறவுகளாகக் கொண்டிருக்கும் அவளின் வாழ்க்கையில் மேரிக்கு விரக்தியிருப்பதாகக் கதை கூறாததால், தன் உடல் நலத்தைக் கவனிக்காமலிருப்பது பொறுப்பற்றதன்மை அல்லவா என்றே என்னை எண்ணவைத்தது. 

 ‘நந்தியாவட்டைப் பூக்கள்’ கதை ஒரு பிள்ளையின் பார்வையில் சொல்லப்படுகிறது. ஆனால் பிள்ளையின் வயது ஊகிக்க முடியாத வகையில் இரு வேறுபட்ட எல்லைகளைக் காட்டியது. அப்பாவுக்கும் பெரியம்மாவுக்கும் உறவிருப்பதால் பெரியம்மாவின் வீட்டுக்கு அப்பா போட்டுவருவது அம்மாவுக்கு கோபத்தைத் தருகிறது. அம்மாவின் கோப நடத்தைகளால் அந்தப் பிள்ளைக்குப் பெரியம்மாதான் விருப்பத்துக்குரியவராக இருக்கிறார். இந்தக் கதையில் வரும் அப்பா பிரக்ஞையோ பொறுப்போ இல்லாத ஒருவராக இருக்கிறார். பெரியம்மா வீட்டுக்குப் பிள்ளையுடன் ஒன்றாகச் சென்று அப்படியான ஒரு உறவைப் பேணுவதும், அம்மாவுக்கும் பிள்ளைக்குமான உறவைப் பாதிக்கும் வகையில் நடப்பதும் அந்த அப்பாவில் எனக்குக் கோபத்தையே எழுப்பின. அதேபோல, சிறப்பான ஒரு பாத்திரமாகப் பெரியம்மா படைக்கப்பட்டிருந்தபோதும், அவரின் செய்கைகள் அவரைக் கீழானவராகவே என்னை உணர வைத்தன. ‘சுதர்மா அத்தையின் தென்னோலைக் கூரைக்கு யாரோ தீக்குச்சியை எறிய, கூரை படபடவென பற்றியெரிந்த போதும் கூட பெரியம்மா பதற்றப்படவில்லை. இந்தப் பெரிய வீடு பற்றியெரிஞ்சாலும் இப்படித்தான் இருப்பா என்று அம்மா கத்தினாள். பெரியம்மா அதைக் காதில் வாங்கியதாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை,’ என வரும் ஒரு விவரணம் பெரியம்மாவின் அமைதியைக் காட்டவில்லை, சக மனிதர்கள் மேலான அக்கறையின்மையே காட்டுகிறது என்றே எனக்குத் தோன்றியது. இருப்பினும், நந்தியாவட்டைப் பூக்கள் மலர்தல், உதிர்தல் மற்றும் வீட்டின் ஒழுங்கமைப்பு போன்ற பெளதிக விடயங்களை உவமையாகக் காட்டுவதன்மூலம் கதை மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது.

   ‘இப்போதும்’, என்ற கதை என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும் முதல் காதலன் அல்லது கணவனில் இருக்கும் பாசம் இலகுவில் அற்றுப்போய்விடாது என்பதை, ‘நான் வைத்த பூச்செடிகள் எப்படியிருக்கு,’ எனக் கேட்பவளுக்கு, ‘உரம் போடுகிறதில்லை ஆனால் அடிக்கிற வெயிலை தானா வளருது,’ என அவன் சொல்லும் பதிலின் மூலம் எழுத்தாளர் சிறப்பாகக் காட்டியுள்ளார். அத்துடன் அவர்கள் இருவரினதும் விருப்புக்களையும் செயல்பாடுகளை பல்வேறு விடயங்களுக்கு ஊடாக ஒப்பிடல் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையிலிருந்த முரண்பாடுகளை தக்‌ஷிலா அழகாகக் காட்டியுள்ளார். பிள்ளைகள் பெற்றோரைப் பாதுகாக்க வேண்டுமென்ற நினைப்பு எவ்வளவு பிழையானது என்பதையும் இந்தக் கதை பின்வரும் உரையாடல் மூலம் அறிவுறுத்துகிறது.

“நாம் வயசாகுற காலத்துல நம்மைப் பார்த்துக் கொள்ளணும்னு நினைச்சு பிள்ளை பெத்து வளர்க்கத் தேவையில்ல சந்திமா. அவங்க, அவங்களோட உலகத்தைத் தேடிப் போகட்டும். அவங்களுக்கும் கூட ஓய்வா, வாழ்க்கையை அனுபவிக்க நேரம் வாய்க்குமென்றால் அவங்களே நமக்கு முடியாமப்போற காலத்துல உதவி செய்வாங்க.’

‘ஒரேதிடலில்,’ என்ற கதை முற்றிலும் ஆணாதிக்க மயமாகத்தானிருந்தது. முன்னாள் கணவன் இன்னொரு பெண்ணைத் தேடிப்போகிறான். புதுக் கணவன் அவளின் விருப்பம் எதுவெனக் கரிசனைப்படாமல், தான் ஏதோ பெரிய தியாகி போல அவளின் வாழ்வைத் தானே தீர்மானிக்கிறான். இந்தக் கதையும் பிள்ளையின் பார்வையில் சொல்லப்படுவதால், அம்மாவுக்கு இருவரிலும் ஒரேயளவு அன்பிருந்ததால் தீர்மானிக்கமாட்டா என்பதால் துணையை இழந்திருக்கும் பழைய கணவனுடன் அவளின் வாழ்வுப் பாதையை இணைப்பதற்குப் புதுக்கணவன் முடிவெடுத்ததாகச் சமாதானம் வருகிறது.

            ‘தங்கையைத் தேடி,’ என்பது தமிழ் – சிங்கள சுதந்திரப் போராட்டகாரர்களின் சோகங்களைக் கூறுகிறது. அதுவும் சிறப்பாகவும் யதார்த்தமாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.

தமிழ் சிங்கள் உறவை வளப்படுத்தும் வகையிலான ஒரு கதையாகப் ’பொட்டு’ கருதப்படுகின்றது. விதவையாக வாழும் ஒரு சிங்களப் பெண்ணுக்கும் வாடகைக்கு இருக்கும் தமிழ் ஆணுக்கும் காதல் உருவாகிறது. ஆரம்பத்தில் பொட்டு இருந்தால் அழகாயிருக்கும் என அவளுக்குப் பொட்டு வைத்து அழகு பார்க்கிறான் அவன், பின்னர் பொட்டு இல்லாமலேயே நீ அழகுதான் எனச் சொல்வது தமிழ்-சிங்கள் பேதம் காதலில் போய்விடுகிறதைச் சொல்லவந்தது போல இருந்தது. ஆனால் நாளாந்தப் பிழைப்புக்காகப் போன இடத்தில் தமிழ் தீவிரவாதிகளின் குண்டடிபட்டு செத்துப்போன கணவன் இறந்த சோகத்தை, சில காலம் பழகிய அவன் தீவிரவாதி எனக் கைதுசெய்யப்பட்டு போனபோது உணர்ந்ததாகச் சொல்வது சற்றும் யதார்த்தமானதல்ல என்றே எனக்குத் தோன்றியது. எனினும் கதை மிக அழகாக அந்தப் பெண்ணின் நோக்கிலும் உணர்வுகளினாலும் எழுதப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான பேசாப் பொருள்களைப் பற்றி எழுதுகின்ற பெண்களை அந்தக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களோடு ஒப்புநோக்கும் எங்களின் சமூகக் கட்டமைப்புகள் எதையும் பொருட்படுத்தாத தக்‌ஷிலாவின் தைரியம் பாராட்டப்படவேண்டியதே.

நன்றி: சிறுகதை மஞ்சரி, ஜூலை 22 (2021)



Comments

Popular posts from this blog

අගුල්මඩුවේ ලාක්ෂා ශිල්පය

බීඩි ඔතන ළදුන්

මන්දිර සරසන සේසත් කලාව